Author: vettaiperumal
•12:12 AM
அந்த ‘நாளை’ வந்தேவிட்டது. காலையில் கண் விழித்ததுமே ராமச்சந்திரனுக்கு ஃபோன் போட்டு ‘என்னடா ஏதாவது ப்ராக்டீஸ் பண்ணியா?’ என்று கேட்டேன். அவன் வழக்கம் போல, ‘எங்கடா.... நான் ராத்திரி தூக்கவே ஒரு மணிக்கு மேல ஆயிடுச்சு..’என்றான். (அது வரை என்ன செய்தான் என்று சொல்லவில்லை) அன்று அலுவலக வேலை காரணமாக அதற்குமேல் அந்த விஷயத்தை நினைக்க நேரமில்லை. ஆனாலும் மனதின் ஓரத்தில் அந்த விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் ஆனதும் என் படபடப்பு அதிகமானது. நண்பருக்காக முடித்துத் தரவேண்டிய வேலை ஒன்று பாக்கியிருந்ததால் மதியத்திற்கு மேல் அங்குசெல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. றெக்கையைக் கட்டிக்கொண்டு பறந்தேன். இரண்டு மணிக்கு மேல் தான் அந்த வேலையைத் தொடங்கினேன். மூன்று மணிக்குள் முடியுமா என்று தெரியவில்லை. முச்சுவிட நேரமில்லை என்பார்களே..... அப்படியென்றால் என்னவென்று அன்று தான் எனக்குப் புரிந்தது. உதவியாளர் கொண்டுவந்து கொடுத்தத் தண்ணீரைக் குடிக்கக் கூட முடியவில்லை. குடிக்கும் நேரத்தில் ஐந்து நிமிடம் வீணாகுமே. சொன்ன நேரத்திற்கு இயக்குநரின் எதிரில் போய் நிற்க வேண்டுமே . நேரமில்லை என்று ரொம்பப் பீற்றுவதாக எண்ணவேண்டாம்.
இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை தான் இந்தப் போராட்டம். அதன் பிறகு நான் வெட்டி தான். இரண்டு மணிவாக்கில் ராமச்சந்திரனிடமிருந்து போன் வந்தது. எடுப்பதா வேண்டாமா என்று யோசனை. எடுத்தால் காரியம் கெட்டுவிடும். எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. எடுத்தேன். ‘எங்கட இருக்கே... கிளம்பிட்டியா...?’என்று கேட்டான். ‘நான் கிளம்புறது இருக்கட்டும். நீ கிளம்பிட்டீயா?’ என்றேன்.‘டேய்.. நீ கிளம்புறப்ப போன் பண்ணு. நான் கிளம்பிவர்றேன்’என்று அவன் சொன்னதும் சுர்றென்று என் உச்சி மண்டையில் ஏறியது. அவன் பாணியிலே நாரசமாய் இறங்கிவிடலாம் என்று தான் பார்த்தேன். காரியம் கைகூடும் நேரத்தில் கலனிப்பானைக்குள் கைவிட்டுவிடக் கூடாது என்றெண்ணி அந்த யோசனையைக் கைவிட்டேன். வந்த ஆத்திரத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன். ‘ஏய்.... கௌம்பிவாடான்னா.... என்னக் கிராஸ் கேள்வி கேட்குற... சரியா மூணுமணிக்கு நீ அங்க இருக்கணும் ஆமா... நாம் எப்படியாவது வந்து சேர்றேன்’ ’என்று சொல்லிவிட்டு போனைக் கட்பண்ண நினைத்தேன்.
தம்பி அசருவானா என்ன?. ‘கிளம்புறதுக்கு முன்னாடி போன் பண்ணுடா... நான் கிளம்பிவந்துடுறேன்’ என்றான் சாவகாசமாக. எனக்குத் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. ‘என்னமோ பண்ணித் தொலை’ என்று நினைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். இதற்குள் பத்து நிமிடம் பறந்துவிட்டது. எனக்கு நெஞ்சு வலி வராததுதான் பாக்கி. வேலையை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தால் உயிரே போய்விட்டது. மணி இரண்டு ஐம்பது. நான் இருந்தது திருமலைப்பிள்ளை ரோடு. போகவேண்டிய இடம் கோடம்பாக்கம் ராம் தியேட்டர் பின்புறம். நண்பன் அய்யப்பனிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினேன். அவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. ‘சார் இதைவிட வேலையென்ன வேண்டிக்கிடக்கு.... உங்க ஃப்ரண்டுக்கு சினிமாவுல சான்ஸ் கிடைச்சா எனக்கு ட்ரீட் வைக்கச் சொல்லுங்க’’ என்று அவன் சொன்ன போது பைக் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மேல் பறந்து கொண்டிருந்தது. வண்டியில் ஏறும் முன் ராமச்சந்திரனுக்குப் மறக்காமல் போன் பண்ணிவிட்டுத்தான் கிளம்பினேன். ‘தோ...வந்துட்டேன்‘ என்றான். கோடம்பாக்கம் வ.உ.சி. தெருவில் உள்ள இயக்குநரின் அலுவலக வாசலில் அய்யப்பன் வண்டியை நிறுத்தும் போது மணி சரியாக 2.55. திடுதிடுவென்று ஈரக்குலையைக் கையில் பிடித்துக்கொண்டு படியேறினால் இயக்குநரைச் சந்தித்துவிடலாம். அங்கே எனக்காக ராமச்சந்திரன் காத்திருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆள் இல்லை. பதறியடித்துக் கொண்ட ராமச்சந்திரனுக்குப் ஃபோன் போட்டேன். எடுக்கவில்லை....
|
Author: vettaiperumal
•4:50 AM
மயக்கம் தெளிய ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது. என்ன செய்வது கையிருப்பது வெளிநாட்டுக் குழந்தைகளாயிற்றே.....?
ராமச்சந்திரனைச் ‘செவுலோட சேர்த்து வச்சு நாலு சாத்து சாத்தலாம்’ என்று ஆத்திரம் வந்தாலும், ஜானிவாக்கரும், க்ளென்ஃபிடிச்சும் என் கைகளைக் கட்டிப்போட்டிருந்தன. ‘போறான் போ’ என்று பொறுத்துக்கொண்டு ‘இப்ப என்ன தான் சொல்ற?’ என்றேன்.
‘இல்ல மாப்ளே.... என் கழுத்தை நெரிக்கிற அளவுக்கு செட்டியூல் பயங்கர டைட்டா இருக்கு’ என்று தன் இரு கைகளையும் கழுத்துக்கு நேரே வைத்து நெரித்துக்காட்டினான். எனக்கு உண்மையிலேயே அவன் கழுத்தை நெரிக்க வேண்டும் போலிருந்தது. வந்த கடுப்பையெல்லாம் மென்று விழுங்கிக்கொண்டேன்.
‘எனக்கென்ன மயிரு.... நாளைக்கு வந்தா வா... இல்ல எக்கேடுகெட்டு ஒழி..’ என்றேன் எரிச்சலாக.
கடுமையான யோசனைக்கு ஆளானான் ராமச்சந்திரன். உதட்டைக் கடித்தபடி தனக்குத் தானே ‘எஸ்..எஸ்....எஸ்....எஸ்’ என்று தலையாட்டிக் கொண்டான். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக, ’ஓகே....ஓகே.....சரி மாப்ளே... நாளைக்கு முணு மணிக்கு எப்படியாவது வந்துடுறேன்’ என்று தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி இயக்குநர், இசையமைப்பாளர், மற்றும் எனக்கும் பெருங்கருணைகாட்டினான். அடுத்ததாக நான், ‘அய்யா’ மனமிறங்கிக் கருணை மழை பொழிந்த அற்புதத்தை இயக்குநருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கலக்கமாக இருந்தது. இருந்தாலும் புலி வாலைப் பிடித்த பிறகு விடமுடியுமா? எக்மோர் ஸ்டேஷன் வாசலில் நின்றபடியே மறுபடியும் இயக்குநரை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். சற்று நேரம் மௌனம் காத்தார். எனக்கு படபடப்பாக வந்தது. ‘வக்காள ஓலிகளா? என்ன விளையாடுறீங்களா....?’ என்று அவர் பதிலுக்கு கேட்பது தான் நியாயம். ஆனால் அவர் அநியாயத்திற்கு நல்லவராக இருந்தார். ‘அப்படியா.... ? எனக்கு ஒண்ணுமில்ல... நாம சொல்ற டயத்துக்கு மியூசிக் டைரக்டர் வரணும். அதுதான் பிரச்னை. பரவாயில்ல விடுங்க... நான் நாளைக்கு அவர எப்படியாவது வரச்சொல்லிடுறேன். நீங்க மூணு மணிக்கு உங்க ஃபிரண்டோட வந்துடுங்க’ என்றார்.
அடுத்ததாக நாளைக்கு என்ன பாடலைப் பாடிக்காட்டுவது, இயக்குநரிடம் என்ன பேசுவது,,, என்ன பேசக்கூடாது என்பதையெல்லாம் விவாதிக்க(மிரட்டி வைக்க) கண்ணகி சிலை பக்கம் நானும் ராமச்சந்திரனும் ஒதுங்கினோம். வாகாக ஒரு இடத்தை தேர்வு செய்து பீச் மணலில் அமர்ந்துகொண்டோம். ‘என்ன பாடுவது.... சினிமா பாட்டா.... ? இல்ல ஏதாவது வெயிட்டான கீர்த்தணையா....? சினிமா பாட்டுனா மெலோடியா.... இல்ல கிளாஸிக்கலா....? என ஒரு மணிநேரத்திற்கு மேல் குழம்பித் தீர்த்தோம். ராமச்சந்திரன் பயங்கர டென்சனில் இருந்தான். ‘நான் பாடியே பல வருஷம் ஆச்சுடா... நீ அங்கே என்னென்னத்த சொல்லி வச்சிருக்கியோ....?’ என்று பயந்தான். ‘சரி எதையாவது பாடு எல்லாம் சரியாயிடும்’ என்று உற்சாகப்படுத்தினேன். எங்களுக்கு எதிரே அரை இருட்டில் ஒரு ஜோடி வாயோடு வாய் வைத்து எதையோ பேசி(?)க்கொண்டிருந்தது. ராமச்சந்திரன் தொண்டையைக் கணைத்துக் கொண்டு எடுத்துவிட்டான் ஒரு பாட்டை. ‘ஆஆஆ.........ஆஆஆஆஆஆஆ...... ஆஆஆஆஆஆஆஆஆஆ..... .’ கரகரப்பிரியா ராகத்தில் எட்டூருக்குக் கேட்டும் குரலில் ஆலபானை செய்யத் தொடங்கினான். (வாயோடு) வாய் போட்டுக்கொண்டிருந்த ஜோடி திடுக்கிட்டு எங்களை வெறியோடு திரும்பிப் பார்த்தது. நான், ‘எழுந்து ஓடிவிடலாமா’ என்று யோசித்தேன். ஆனால் நண்பன் கண்களை மூடிக்கொண்டு இசைவெள்ளத்தில் ‘தொபுக்கட்டீர்ணு’ குதித்து நீந்திக்கொண்டிருந்தான். ஏகாந்தமான கடற்கரைக் காற்று... நெக்குருக வைக்கும் ராமச்சந்திரனின் பாட்டு... தடவ முடியாமல் திருட்டு முழி முழிக்கும் காமாந்தக் காதலர்கள்... எந்த நேரத்திலும் காலோடு கையோடு பேதியாகும் நிலையில் நான்... அடடா என்ன வொண்டர்ஃபுல் காம்பினேஷன்?
ராமச்சந்திரன் போட்ட சத்தத்தில்(அடப் பாட்டுதாங்க) அந்த இடத்தில் ஊரே கூடிவிடும் நிலை. நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொண்ட வாய்க் காதலர்கள் எடுத்தார்கள் பாருங்கள் ஓட்டம். எனக்கு அப்போது தான் ‘அப்பாட...’ என்றிருந்தது. பாட்டு மணிக்கணக்காகத் தொடர்ந்தது. அவன் பாட ஆரம்பித்துவிட்டால் எனக்கு சலிக்காது. தொண்டை கட்டும் வரை விடமாட்டேன். கடைசியில் நாட்டை ராகத்தில் ஒரு கீர்த்தணையும், மோகமுள் படத்தில் வரும் ‘கமலம் பாதக் கமலம்’ பாடலையும் மியூசிக் டைரக்டருக்குப் பாடிக் காட்டுவது என்று முடிவானது. இறுதில் முக்கியமான கட்டத்திற்கு வந்தேன். நாளை இயக்குநரைச் சந்திக்கும் போது பாட்டுப்பாடுவதற்கு மட்டும் தான் ராமச்சந்திரன் வாய் திறக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டேன். மறுப்பேதும் சொல்லாமல் நல்லபிள்ளைபோல் ‘நான் வாயே திறக்கலபோதுமாட..?’ என்றான்.
‘தாராளமா வாயத் திற... ஆனா படறதுக்கு மட்டும்’ என்றேன் நான்.
‘நாளை’ என்ன நடந்தது என்பதை நாளை எழுதுகிறேன்....
|
Author: vettaiperumal
•3:07 AM
ராமச்சந்திரனை எப்படித் தொடர்புகொள்வேன்? செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல் ராமச்சந்திரன் தொடர்பில் இருந்தால் தான் தொந்தரவு என்றில்லை. அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும் அக்கப்போர்தான். யாரைவாது தொடர்புகொள்ள முடியவில்லையென்றால் செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுவேன். அப்படி நோண்டும் போது ராமச்சந்திரன் அப்பாவின் பழைய நம்பர் ஒன்று சிக்கியது. அனேகமாக அது பயன்பாட்டில் இருக்காது என்ற எண்ணத்தோடு அந்த எண்ணை அழைத்தேன். ‘ஹலோ,,’ படு பேஸ்வாய்ஸில் சின்சியரான தொணியில் பேசினால் அது ராமச்சந்திரன். ‘எங்ங்ங்கடா....? இருக்க.... நீயென்ன பெரிய புடுங்கியா....?’ என்று நான் கத்த ஆரம்பிக்க, ‘ஸாரி மாப்புள... ஸாரி...ஸாரி. டேய் நான் சொல்றதக் கேளுடா கொஞ்சம்’ என்று ஏதோ கதை சொல்ல ஆரம்பித்தான். அவன் சமீபத்தில் பெரிய பிரச்னையில் சிக்கியிருப்பது எனக்குத் தெரியும் தான். ஆனால் முடியும், முடியாது என்று எதையாவது சொல்லித் தொலைக்கலாமே? கேட்டால், ‘என்னிடம் செல்ஃபோன் இல்லை. அதனால் உன்னுடைய நம்பரும் இல்லை’ என்கிறான். இதாவது பரவாயில்லை. ‘பத்துப் பைசா கூட என்கிட்ட இல்லடா... அப்பாகிட்ட கேட்க சங்கடாமா இருந்துச்சு அதுதான் வரமுடியல’ என்கிறான். நியூயார்க்கிலிருந்து வந்தவன் பேசும் பேச்சைப் பார்த்தீர்களா? அவன் பேங்க் அக்கவுண்டில் ஏதோ பிரச்னையாம். எல்லாப் பிரச்னையும் இவனுக்கென்றே வந்து சேர்கிறது பாருங்கள்.
‘சரி.... இப்பப் போலாமா? நான் ரெடி....’ என்றான். அப்போது மாலை ஏழு மணி. நான் கீழ்கட்டளையில் இருக்கும் என் வீட்டை நெருங்கிவிட்டேன். ‘என்னால முடியாது சாமி... நான் கோடம்பாக்கம் வந்து திரும்புறதுக்குள்ள என் தாவுதீர்ந்துடும். நாளைக்குப் பார்க்கலாம்’ என்று நான் சொல்லி முடிக்கும் முன் ‘நாளைக்கு நான் பிஸி’ என்று பதில்வந்துவிட்டது. ‘பிஸின்னா போ.... உன்ன உருவி உருவிக் கொண்டுபோய் சேர்க்குறதுக்குள்ள நான் போய்ச் சேந்திருவேன் போல’ என்றேன் மண்டிய எரிச்சலை அடக்கமுடியாமல். ‘இல்ல மாப்புளா... நீ நினைக்கிற மாதிரி இல்ல மாப்புள... எனக்கு நிக்க நேரமில்ல.... பயங்கர டைட் செட்யூல்ல இங்க வந்திருக்கேன்....’ என பில்கேட்ஸ் ரேஞ்சுக்குப் பேசினேன். நான் அமைதியாகிவிட்டேன். ‘அப்ப நீ வந்த வேலையப் பாரு... நான் என் வேலையப் பார்க்குறேன்’ என்று சொல்லிவிட்டேன். கொஞ்ச நேரம் எதிர்முனையில் சத்தமேயில்லை. ‘சரிடா.... நாளைக்கு ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணிட்டு வரப்பார்க்குறேன்’ என்று பெரிய மனது பண்ணினான். ‘அதெல்லாம் சரி... இப்ப விட்டா மறுபடியும் உன்னை எப்படிப் புடிக்கிறது...? .எப்படியும் நீ என்னக் கூப்பிடமாட்ட... எந்த நம்பர்ல உன்னைக் கூப்பிடறது?’ ‘இதே செல்ஃபேனை உனக்காக நானே வைச்சுருக்கேன்டா... போதுமா?’
ஒருவழியாக அந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு மறுநாள் என்று முடிவானது. மறுநாள் மதியம் தான் என்னால் அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடிந்தது. ராமச்சந்திரனை அழைத்தேன். ‘பெருமாள்... டைரக்டர பார்க்குறதுக்கு முன்னாடி நாம சந்திக்கணும் டா.. ’ நியாயமான பேச்சு. காரணம் அய்யாபுள்ளையைத் திடீரென்று டைரக்டர் முன்னால் கொண்டு போய் நிறுத்தினால் நம்ம கதி அதோகதிதான். எதை எந்த நேரத்தில் பேசுவான் என்று அந்த ஆண்டவனுக்குக் கூடத் தெரியாது. ஒருவேளை அந்த டைரக்டர் தெய்வமாக மதிக்கும் யாரையாவது , இவன் போகிறபோக்கில் ‘அவன் ஒரு தேவடியப் பய’ என்று சொல்லிவிடும் அபாயம் எப்போதும் உண்டு. அதனால் முன்கூட்டியே தம்பிக்குத் தகுந்த பயிற்சி கொடுக்கவேண்டும். அதனால் எக்மோரில் இருவரும் சந்தித்தோம். ஆட்டேவில் வந்து இறங்கியவன் கையில் ஒரு பை இருந்தது. பிள்ளைகளுக்கு ஏதுவது பொம்மை, வெளிநாட்டு சாக்லேட் கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தேன். வந்ததும் வராததுமாக அந்தப் பையை என் கையில் திணித்தான். திறந்து பார்த்தால் அதனுள் இரண்டு செல்லக்குட்டிகள் உட்கார்ந்திருந்தன. ஒன்றின் பெயர் ஜானிவாக்கர். இன்னொன்று ஏதோ பச்சை நிறத்தில் இருந்தது. அதுக்குப் பன்னிரெண்டு வயசாம். (பெயர் க்ளென்ஃபிடிச்)கொடுக்கும் போதே ஒரு கண்டிஷன் போட்டான். ‘ஜானிவாக்கர் உனக்கு.. இன்னொன்னு நீ, நான், ஷாஜி(ஜெயமோகனின் நண்பர்) மூணு பேரும் உட்கார்ந்து அடிக்க...’ ‘எப்படியோ குடிச்சா சரி‘ என்று ஒப்புக்கொண்டேன்.
டைரக்டருக்குப் ஃபோன் போட்டேன். அவர் திருநீர் மலையில் இருந்தார்.
‘நாளைக்குக் காலையில் சந்திக்கலாம். மியூசிக் டைரக்டரையும் வரச்சொல்லிவிடுகிறேன்’ என்றார். இதை ராமச்சந்திரனிடம் சொன்னதும் என்ன சொல்லியிருப்பான் என்று உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. ‘சான்ஸே இல்ல மாப்புள... நாளைக்கு என்னால ஒரு நிமிஷம் கூட அங்க இங்க அசைய முடியாது’ என்றான். எனக்கு மயக்கமே வந்துவிட்டது...
மயக்கம் தெளிந்ததும் மற்றதைச் சொல்கிறேன்.
|
Author: vettaiperumal
•4:20 AM
இரண்டு நாட்களாக ஏதும் எழுதவில்லை. நான் எழுதாவிட்டால், யாரும் தீக்குளித்துவிடுவார்களோ என்ற பேரச்சத்தின் (நப்பாசையின்) காரணமாக, ‘இன்று எழுதமுடியவில்லை... மன்னிக்க...’ என்று அறிவிப்புவேறு வெளியிட்டேன். சரி... விஷயத்திற்கு வருவோம்.
’பார்க்கலாம்.... வேட்டை. ஒரு வாரம் கழிச்சு சென்னைக்கு வர்றேன் அப்பப் பார்க்கலாம்’ என்று ராமச்சந்திரன் அலட்சியமாகச் சொன்னான். ‘நெஞ்சு நிறைய ஆசையை வச்சுக்கிட்டுத், திருட்டுப்பய நடிக்கிறான்‘ என்று தான் நினைத்துக்கொண்டேன். வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, ’டேய்.... நாளைக்கே கிளம்பி வாடான்னா வா... நாம இப்படி நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்ணியிருக்கோம். இந்தத் தடவ விடக்கூடாது தயவுசெஞ்சு வந்து சேரு’ என்றேன்.... ’சரிடா....சரிடா... நான் சாயங்காலம் உன்னைக் கூப்பிடுறேன்....ஓகே.. கூல் மச்சி....கூல் கூல்’ என்றான். ஃபோனை வைத்த பிறகு எனக்கு நிம்மதியாக இல்லை. ஏதோ அவன் பேச்சில் நெருடியது. இது வழக்கமாக ராமச்சந்திரனின் பேச்சல்ல.
அவன் ஒரு விஷயத்தில் உற்சாகமாகிவிட்டால் காதிலிருந்து ரத்தம் வரும்வரை பேசிக்கொண்டேயிருப்பான். செல்ஃபோனைப் பிடிக்கும் கை கடுக்கும். காதுமடல் சூடேறி த் தீயாக எரியும். ஆனாலும் விட மாட்டான். ஒருமுறை...அவன் மணிக்கணக்காக செல்ஃபோனில் பாடிக்கொண்டிருந்ததோது, எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்துவிட்டது. என் அவஸ்த்தையை உணராத அவனோ, வனஸ்பதி ராகத்தில்(சத்தியமா அப்படியொரு ராகம் உண்டுங்க) என்னைத் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தான். ’’டேய் செத்த இருடா பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்’ என்று சொன்னேன். ’கொஞ்சம் மூடிக்கிட்டு கேளுடா‘ என்றவன், தொடர்ந்து பாட ஆரம்பித்துவிட்டான். நான் ‘அந்த’ இடத்தில் கைவைத்துப் பொத்திக்கொண்டு கட்டிலில் உட்காருவதும், நிற்பதுமாக, டான்ஸ் ஆடியபடி நெளிந்து கொண்டிருந்தேன். இதை வினோதமாகப் பார்த்த அறை நண்பர் கூத்தலிங்கம், ‘என்ன வேட்டை நீர்க்கடுப்பா?’ என்று சிரிப்பை அடக்கமாட்டாமல் கேட்டார். அவரிடம் சைகையிலே ஒன்றை விரலைக் காண்பிக்க, அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார். ’யாரு.... ராமச்சந்திரனா....? அப்ப பேண்டோட பேஞ்சுடுங்க.... பாண்டிய விட்டு ரூமைக் கழுவிக்கலாம்’ என்றார் சிரித்துக்கொண்டே. எங்கள் அறையில் பாத்ரூம் இல்லை. மொட்டை மாடிக்கு ஓடவேண்டும். ஆனால், ராமச்சந்திரனின் கச்சேரி களைகட்டியிருந்தது. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஆபத்துதான். கூத்தலிங்கம், விஷயத்தைக் கூத்தாடிச் சொல்லிவிடுவார். திடுதிடுவென ஓட்டமெடுத்தேன். இரண்டு மாடி ஏறவேண்டும். நான் புயல்வேகத்தில் பாத்ரூமிற்குள் நுழைந்த போது பாட்டு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஜிப்பைத் திறந்து எடுத்துவிட்டேன் பாருங்கள்... மட மடன்னு காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துகொண்டிருந்தது...இசைவெள்ளம். ஆஹா-
திடீரென்று பாட்டை நிறுத்திவிட்டு, ’அங்கே என்னடா , சட சடன்னு சத்தம்? என்று கேட்டான். ‘ஒண்ணுக்குப் போறேன்டா‘ என்றேன். அப்புறமென்ன? வழக்கம் போல் புனா சுனான்னு பொளந்துகட்டிவிட்டான். (அவனுடைய இசையைப் பற்றி பொருந்தாத இடத்தில், படுமோசமான விதத்தில் அறிமுகம் செய்ததற்கு மன்னிக்கவேண்டும். எங்களுக்குள் இசையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவனுடைய இசை என் உயிரைத் தீண்டிய அபாரமான தருணங்களைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்) இப்படி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பவன், சினிமாவில் வாய்ப்புகிடைத்துள்ளது என்ற செய்தியைச் சொன்ன பிறகும் இரண்டொரு வார்த்தையில் பேச்சை முடித்துவிட்டது வினோதமாகவே இருந்தது. அதுதான் ராமச்சந்திரன். அவன் சொன்னபடி அன்று மாலை ஃபோன் பண்ணவில்லை. இரவு பத்துமணிக்கு அவன் வீட்டு நம்பருக்குப் ஃபோன் பண்ணினேன். எடுத்தது அவனுடைய மனைவி. ‘வெளியே போயிருக்கிறாரே...வந்ததும் சொல்றேன்’ என்று பதில் வந்தது. மறுநாள், அதற்கு மறுநாள்... அதற்கும் மறுநாள்? ம்ஹும். அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இரண்டு நாளில் அழைத்துவருவதாக இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேனே? அவனிடம் செல்ஃபோனிருந்தால் அழைத்துப் பேசியிருப்பேன். வீட்டு நம்பருக்குப் போன் பண்ண எனக்கு விருப்பமில்லை. அவன் சொன்ன ஒருவாரம் போயே போய்விட்டது.
இதற்கிடையில் வேறுவேலையாக இயக்குநரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்போது அவர் மறக்காமல் கேட்டார். ‘எங்கே உங்க ஃப்ரண்டு? கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க?‘
‘அவன் வீட்டுல கொஞ்சம் பிரச்னை..இன்னிக்கு இல்ல நாளைக்கு வந்துடுவான்’ என்றேன். ‘பரவாயில்ல... வரட்டும் வரட்டும்..’ என்றார் பொறுமையாக. எனக்குச் சங்கடமாகிவிட்டது. ஆனாலும் வாய்ப்பு இன்னும் இருக்கிறதே என்று மனது அடித்துக்கொண்டது. உடனே சுயகவுரவத்தை உதறிவிட்டு, ராமச்சந்திரன் வீட்டுக்குப் போன் போட்டேன். மணி அடித்துக்கொண்டேயிருந்தது. எடுப்பார் யாருமில்லை. அப்போதுதான் அவன் சென்னைக்குக் குடும்பத்தோடு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. இனி நான் அவனை எப்படித் தொடர்பு கொள்வேன்?
|
Author: vettaiperumal
•3:37 AM
இன்று ராமச்சந்திரனைத் தொடர முடியவில்லை.... மன்னிக்க... நாளை எழுதுகிறேன்....
|