Author: vettaiperumal
•4:11 AM
இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ராமச்சந்திரா?

நான் இன்று தான் என்னுடைய வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். எனக்காக..... நான் விரும்பியதெல்லாம் எழுதுவற்தாக..... நான் தேர்வு செய்யும் கதை... கவிதை, கட்டுரைகளை வெளி யிடுவதற்காக ஒரு இணையதளம் ஒன்று தொடங்கப் பட்டது. அந்த வேண்டாத வேலையைச் செய்தது ராமச்சந்திரன். ஒருவரை ஒருவர் சொறிந்து கொள்வதில் நாங்கள் கில்லாடிகள். ஆனால் உருப்படியாக ஒன்றும் நடக்காது. (சமீபத்தில், ஒரு டைரக்டரிடம் கெஞ்சாமல், கூத்தாடாமல் சினிமாவில் பாட அவனுக்கு ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன். ரிக்காடிங் அன்று, ‘ஐயா!’ ஸ்டூடி யோவிற்கு வரவேயில்லை) கிடக்கட்டும். எனக்காக ராமச்சந்திரன் தொடங்கிய வெப்சைட்டின் பெயர் மகாகவி.இன். ‘வெளக்க மாத்துக்குப் பட்டுக்குஞ்சம்னு பேராம்’ என்று எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள். அதே கதைதான்.

அவன் ஹைதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தான். எனக்கு அப்போது இண்டர்நெட்டைப் பற்றி ஒரு புண்ணாக்கும் தெரியாது. ஏதாவது ஒரு நெட் கேபிற்குச் சென்று மசாலாகுரு.காம் பார்ப்பதோடு நம் கம்யூட்டர் அறிவு சோர்ந்துபோகும். அவன் தான் ஏதேதோ பினாத்துவான். ‘நான் அந்த எழுத்தாளரப் பற்றி என் பிளக்குள எழுதினேன். டப டப டப டப டப டபன்னு ஆயிரம் பேர் வந்து செருப்பாலே சாத்திட்டங்க’ என்று சொல்வான். நான் மிரண்டு போவேன். நண்பன் எதையும் கொஞ்சம் மிகைப் படுத்திதான் சொல்வான்.
ஆனால்... ஆயிரம் பேர் அடித்தார்கள் என்று சொல்லும் இடத்தில் ஐந்துபேராவது அடித்திருக்கமாட்டார்களா என்ன? அதுவும் புள்ளை செருப்பால் அடிவாங்கியிருக்கிறானே? ‘ஹைதராபாத்துக்கே வந்து அடிச்சாங்களா? இல்லை நீ இங்க வந்தப்ப.....?’ என்று நான் அப்பாவியாகக் கேட்பேன். நண்பன் முறைப்பான். ‘உனக்கென்ன மயிரா தெரியும்? சிற்றிதழ்ல எழுதுனா மொத்தம் நாற்பது பேர் படிப்பானா? இண்டர்நெட்ல எழுதிப்பாரு ஒலகமே உன்னைத் தூக்கிவைச்சுக் கொண்டாடும்’ என்பான். உண்மையில் எனக்கு அந்த மயிரைத் தெரியவே தெரியாது. என் இலக்கியத் திறமையை இண்டர்நெட் மூலம் இந்த உலகிற்கு நிரூபிக்கவேண்டிய கட்ட யாத்திற்கு ராமச்சந்திரன்ஆளானான்.
அவனோடு நீங்கள் ஃபோனில் பேசியிருக்க வேண்டும். அப்போதுதான் அது எத்தனை பெரிய கண்டம் என்பது உங்களூக்குப் புரியும். ஒரு மணிநேரத்திற்குள் முப்பது முறை ஃபோன் பண்ணி, ‘என்ன்ன்டா?(பல்லைக் கடித்தபடியே) பேரை முடிவு பண்ணிட்டியா?’ என்று கேட்டுப்படுத்தியெடுத்தான். அடித்துப்பிடித்து நாலைந்து பேருக்குப் போன் போட்டு, இறுதியில் நண்பர் யூமா.வாசுகி வைத்த பெயர் தான் மகாகவி.இன். ஏதோ ஒரு நாளைக்கு நானூறு பக்கம் எழுதிக் கிழிக்கப் போவதுமாதிரி, ‘மகாகவி. காம்.னு கிடைச்சிருந்தா வெயிட்டாயிருக்கும்’ என்று வேறு சலித்துக்கொண்டேன். பெயர் வைத்து இரண்டுநாள் வரை எந்த ஃபோனுமில்லை. ‘சனியன் விட்டுச்சு’ (நண்பனைச் சொல்லவில்லை) என்று இருந்துவிட்டேன். விடுவானா? மூன்றாம் நாள் காலை பத்துமணிக்கு ஃபோன். நாம் எங்கிருக்கிறோம். யாருக்கு அடிமையாக வேலைசெய்து கொண்டி ருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் அய்யா யோசிக்கவே மாட்டார். போனை எடுத்தால், ‘டேய்ய்ய்.... ஓடு ஓடு... இண்டர்நெட்டுக்கு ஓடு....’ என்று கத்தினான்.
‘எங்கடா ஓடுறது? என்ன விஷயம்னு முதல்ல சொல்லு?’ அவன் ஹைதராபாத்தில் பல்லை நறநறவென்று கடிக்கும் சத்தம் சென்னையில் கேட்டது
‘மயியிரு--...இண்டர்நெட்டுக்குப் போடான்னா’
‘எங்க ஆபீஸ்ல ஒரே ஒரு சிஸ்டத்தில தான் இண்டர்நெட் இருக்கு... அதில யாரோ உட்கார்ந்திருக்காங்க. அப்புறம் போறேன்... என்னன்னு சொல்லு’
‘என்ன மயிரு ஆபிஸ்டா அது..... எல்ல சிஸ்டத்துக்கும் இண்டர்நெட் கொடுத்தா எவன் அப்பன் வீட்டு சொத்து குறைஞ்சு போகுதாம்?’
நான் என்னத்தைச் சொல்வது? எவன் அப்பனிடம் போய் நியாயத்தைக் கேட்பது? இண்டர்நெட்டில் உட்கார்ந்து இருப்பவனிடம் ரொம்ம்ம்ப முக்கியமான வேலைன்னு சொல்லி விரட்டிவிட்டுட்டு , ‘இப்பச் சொல்லுடா’ என்றால், ‘மகாகவி.இன்னு போட்டுப் பாரு என்றான். பயத்தில் எதையோ தப்பும் தவறுமாக அடித்து அடித்துப் பார்த்தால் அந்த வெப்சைட் வரவே இல்லை.
‘ங்கோத்தா நீ ஒரு மயிறுக்கும் லாயிக்கில்லடா.... நல்லா எங்கிட்ட மட்டும் வாய் பேசு’ எனப் புனா சுனான்னு வாயில் வந்ததையெல்லாம் அவன் சொன்ன பிறகுதான் அந்த வெப்சைட் திறந்தது. ‘அட! நல்லாத் தான் இருக்கு!’ ஆச்சர்யமாக என்னுடைய சைட்டைப் பார்த்தேன். பாரதியாரின் ஓவியம் ஒரு மூலையில் இருந்தது. அதற்குக் கீழே மலைவாசியின் குடிசை புகைப்படமாக உட்கார்ந்திருந்தது. அதற்குக் கீழே ஒரு கவிதை என்று நினைக்கிறேன். (கவனிக்க... வெப்சைட்டிற்கு நான் தான் எடிட்டர்!)
‘வேட்டைப்பெருமாளின் சிறுகதைகள்’ என ஒருபக்கம் கொட்டை எழுத்துக்கள் மின்னியது. அதைக் கிளிக்கினால் அந்தப் பக்கம் வெள்ளை வெளேரென பல்லைக்காட்டியது. அவ்வளவு தான். அவ்வளவே தான். தினந்தோறும் குறைந்தது இருபது முறை அழைத்து, மூன்று மணிநேரமாவது பேசுவான். இல்லை கடித்துக் குதறுவான்.
‘எதுவும் எழுதினியா? அங்கே என்ன புடுங்குறியா? எவன்கிட்டையாவது கதை கட்டுரை வாங்குனியா?’ என்று பிராண்டுவான். நான் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படிச் சொல்லுவேன். ‘டேய் இலக்கியவாதிகளைப் பற்றி உனக்குத் தெரியாது. அவர்கள் மனம்போனபோக்கில் சுதந்திரமாக வாழ்பவர்கள். அவர்களிடம் ஒரு படைப்பை வாங்குவது அத்தனை எளிமையான காரியமல்ல’
‘சு..... இந்த வெப்சைட்ட ஆரம்பிக்க ஐயாயிரம் தண்டம் அழுதேண்டா. எல்லாம் போச்சு. உன்னால முடியுமா? முடியாதான்னு முதல்லேயே கேட்டேன்ல. நீ சுத்த வேஸ்ட்டுடா... நீ பேசாம கண்ணகி சிலைக்கு பக்கத்துல போயி......’
எல்லாம் எதிர்பார்த்தது தானே? ஆனால் அந்த வெப்சைட்டால் பலன் இல்லாமல் இல்லை. எப்போதாவது மசாலாகுரு பார்க்க இண்டர் நெட்டுக்குப் போனால், ஒரு கணவானின் கம்பீரத்தோடு மகாகவி வெப்சைட்டைத் திறப்பதுண்டு. தெரிந்தவர்கள் பக்கத்தில் இருந்தால் ‘இது எனக்காக ஆரம்பிக்கப்பட்ட வெப்சைட்டாக்கும்....!’ என்று பீற்றுவதும் உண்டு.
இன்று நிலைமை மாறிவிட்டது. எனக்கு ஆபிஸில் சிஸ்டமுள்ளது. அதில் இண்டர்நெட் இணைப்பும் உள்ளது. நண்பர் ‘அதிஷா’ அவரது பிளாக்கில் எழுதிய வெள்ளியங்கிரி தொடரைப் படித்ததும் எனக்கும் ஏதாவது எழுதவேண்டும்போல் இருந்தது. தோழன் வெற்றிவேலின் துணையோடு இன்று பிளாக்கரில் இடம் பிடித்துவிட்டேன்.
ராமச்சந்திரனுக்குத் தெரிந்தால் சந்தோஷப்படுவான்!

Author: vettaiperumal
•1:12 AM
இன்று என்னுடைய வலைப்பூவை தொடங்கியிருக்கிறேன். பதிவர்கள் ஆதரவு தரவும்