Author: vettaiperumal
•3:07 AM
ராமச்சந்திரனை எப்படித் தொடர்புகொள்வேன்? செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல் ராமச்சந்திரன் தொடர்பில் இருந்தால் தான் தொந்தரவு என்றில்லை. அவன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும் அக்கப்போர்தான். யாரைவாது தொடர்புகொள்ள முடியவில்லையென்றால் செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்துவிடுவேன். அப்படி நோண்டும் போது ராமச்சந்திரன் அப்பாவின் பழைய நம்பர் ஒன்று சிக்கியது. அனேகமாக அது பயன்பாட்டில் இருக்காது என்ற எண்ணத்தோடு அந்த எண்ணை அழைத்தேன். ‘ஹலோ,,’ படு பேஸ்வாய்ஸில் சின்சியரான தொணியில் பேசினால் அது ராமச்சந்திரன். ‘எங்ங்ங்கடா....? இருக்க.... நீயென்ன பெரிய புடுங்கியா....?’ என்று நான் கத்த ஆரம்பிக்க, ‘ஸாரி மாப்புள... ஸாரி...ஸாரி. டேய் நான் சொல்றதக் கேளுடா கொஞ்சம்’ என்று ஏதோ கதை சொல்ல ஆரம்பித்தான். அவன் சமீபத்தில் பெரிய பிரச்னையில் சிக்கியிருப்பது எனக்குத் தெரியும் தான். ஆனால் முடியும், முடியாது என்று எதையாவது சொல்லித் தொலைக்கலாமே? கேட்டால், ‘என்னிடம் செல்ஃபோன் இல்லை. அதனால் உன்னுடைய நம்பரும் இல்லை’ என்கிறான். இதாவது பரவாயில்லை. ‘பத்துப் பைசா கூட என்கிட்ட இல்லடா... அப்பாகிட்ட கேட்க சங்கடாமா இருந்துச்சு அதுதான் வரமுடியல’ என்கிறான். நியூயார்க்கிலிருந்து வந்தவன் பேசும் பேச்சைப் பார்த்தீர்களா? அவன் பேங்க் அக்கவுண்டில் ஏதோ பிரச்னையாம். எல்லாப் பிரச்னையும் இவனுக்கென்றே வந்து சேர்கிறது பாருங்கள்.

‘சரி.... இப்பப் போலாமா? நான் ரெடி....’ என்றான். அப்போது மாலை ஏழு மணி. நான் கீழ்கட்டளையில் இருக்கும் என் வீட்டை நெருங்கிவிட்டேன். ‘என்னால முடியாது சாமி... நான் கோடம்பாக்கம் வந்து திரும்புறதுக்குள்ள என் தாவுதீர்ந்துடும். நாளைக்குப் பார்க்கலாம்’ என்று நான் சொல்லி முடிக்கும் முன் ‘நாளைக்கு நான் பிஸி’ என்று பதில்வந்துவிட்டது. ‘பிஸின்னா போ.... உன்ன உருவி உருவிக் கொண்டுபோய் சேர்க்குறதுக்குள்ள நான் போய்ச் சேந்திருவேன் போல’ என்றேன் மண்டிய எரிச்சலை அடக்கமுடியாமல். ‘இல்ல மாப்புளா... நீ நினைக்கிற மாதிரி இல்ல மாப்புள... எனக்கு நிக்க நேரமில்ல.... பயங்கர டைட் செட்யூல்ல இங்க வந்திருக்கேன்....’ என பில்கேட்ஸ் ரேஞ்சுக்குப் பேசினேன். நான் அமைதியாகிவிட்டேன். ‘அப்ப நீ வந்த வேலையப் பாரு... நான் என் வேலையப் பார்க்குறேன்’ என்று சொல்லிவிட்டேன். கொஞ்ச நேரம் எதிர்முனையில் சத்தமேயில்லை. ‘சரிடா.... நாளைக்கு ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணிட்டு வரப்பார்க்குறேன்’ என்று பெரிய மனது பண்ணினான். ‘அதெல்லாம் சரி... இப்ப விட்டா மறுபடியும் உன்னை எப்படிப் புடிக்கிறது...? .எப்படியும் நீ என்னக் கூப்பிடமாட்ட... எந்த நம்பர்ல உன்னைக் கூப்பிடறது?’ ‘இதே செல்ஃபேனை உனக்காக நானே வைச்சுருக்கேன்டா... போதுமா?’

ஒருவழியாக அந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு மறுநாள் என்று முடிவானது. மறுநாள் மதியம் தான் என்னால் அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடிந்தது. ராமச்சந்திரனை அழைத்தேன். ‘பெருமாள்... டைரக்டர பார்க்குறதுக்கு முன்னாடி நாம சந்திக்கணும் டா.. ’ நியாயமான பேச்சு. காரணம் அய்யாபுள்ளையைத் திடீரென்று டைரக்டர் முன்னால் கொண்டு போய் நிறுத்தினால் நம்ம கதி அதோகதிதான். எதை எந்த நேரத்தில் பேசுவான் என்று அந்த ஆண்டவனுக்குக் கூடத் தெரியாது. ஒருவேளை அந்த டைரக்டர் தெய்வமாக மதிக்கும் யாரையாவது , இவன் போகிறபோக்கில் ‘அவன் ஒரு தேவடியப் பய’ என்று சொல்லிவிடும் அபாயம் எப்போதும் உண்டு. அதனால் முன்கூட்டியே தம்பிக்குத் தகுந்த பயிற்சி கொடுக்கவேண்டும். அதனால் எக்மோரில் இருவரும் சந்தித்தோம். ஆட்டேவில் வந்து இறங்கியவன் கையில் ஒரு பை இருந்தது. பிள்ளைகளுக்கு ஏதுவது பொம்மை, வெளிநாட்டு சாக்லேட் கொண்டு வந்திருப்பான் என்று நினைத்தேன். வந்ததும் வராததுமாக அந்தப் பையை என் கையில் திணித்தான். திறந்து பார்த்தால் அதனுள் இரண்டு செல்லக்குட்டிகள் உட்கார்ந்திருந்தன. ஒன்றின் பெயர் ஜானிவாக்கர். இன்னொன்று ஏதோ பச்சை நிறத்தில் இருந்தது. அதுக்குப் பன்னிரெண்டு வயசாம். (பெயர் க்ளென்ஃபிடிச்)கொடுக்கும் போதே ஒரு கண்டிஷன் போட்டான். ‘ஜானிவாக்கர் உனக்கு.. இன்னொன்னு நீ, நான், ஷாஜி(ஜெயமோகனின் நண்பர்) மூணு பேரும் உட்கார்ந்து அடிக்க...’ ‘எப்படியோ குடிச்சா சரி‘ என்று ஒப்புக்கொண்டேன்.
டைரக்டருக்குப் ஃபோன் போட்டேன். அவர் திருநீர் மலையில் இருந்தார்.
‘நாளைக்குக் காலையில் சந்திக்கலாம். மியூசிக் டைரக்டரையும் வரச்சொல்லிவிடுகிறேன்’ என்றார். இதை ராமச்சந்திரனிடம் சொன்னதும் என்ன சொல்லியிருப்பான் என்று உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. ‘சான்ஸே இல்ல மாப்புள... நாளைக்கு என்னால ஒரு நிமிஷம் கூட அங்க இங்க அசைய முடியாது’ என்றான். எனக்கு மயக்கமே வந்துவிட்டது...
மயக்கம் தெளிந்ததும் மற்றதைச் சொல்கிறேன்.

|
This entry was posted on 3:07 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On July 13, 2010 at 3:23 AM , sandy said...

waiting for 5th part dear

 
On July 13, 2010 at 9:19 PM , vettaiperumal said...

நாளை கண்டிப்பாக எழுதிவிடுகிறேன் நண்பா....