Author: vettaiperumal
•12:12 AM

அந்த ‘நாளை’ வந்தேவிட்டது. காலையில் கண் விழித்ததுமே ராமச்சந்திரனுக்கு போன் போட்டு ‘என்னடா ஏதாவது ப்ராக்டீஸ் பண்ணியா?’ என்று கேட்டேன். அவன் வழக்கம் போல, ‘எங்கடா.... நான் ராத்திரி தூக்கவே ஒரு மணிக்கு மேல ஆயிடுச்சு..’என்றான். (அது வரை என்ன செய்தான் என்று சொல்லவில்லை) அன்று அலுவலக வேலை காரணமாக அதற்குமேல் அந்த விஷயத்தை நினைக்க நேரமில்லை. ஆனாலும் மனதின் ஓரத்தில் அந்த விஷயம் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் ஆனதும் என் படபடப்பு அதிகமானது. நண்பருக்காக முடித்துத் தரவேண்டிய வேலை ஒன்று பாக்கியிருந்ததால் மதியத்திற்கு மேல் அங்குசெல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. றெக்கையைக் கட்டிக்கொண்டு பறந்தேன். இரண்டு மணிக்கு மேல் தான் அந்த வேலையைத் தொடங்கினேன். மூன்று மணிக்குள் முடியுமா என்று தெரியவில்லை. முச்சுவிட நேரமில்லை என்பார்களே..... அப்படியென்றால் என்னவென்று அன்று தான் எனக்குப் புரிந்தது. உதவியாளர் கொண்டுவந்து கொடுத்தத் தண்ணீரைக் குடிக்கக் கூட முடியவில்லை. குடிக்கும் நேரத்தில் ஐந்து நிமிடம் வீணாகுமே. சொன்ன நேரத்திற்கு இயக்குநரின் எதிரில் போய் நிற்க வேண்டுமே . நேரமில்லை என்று ரொம்பப் பீற்றுவதாக எண்ணவேண்டாம்.

இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரை தான் இந்தப் போராட்டம். அதன் பிறகு நான் வெட்டி தான். இரண்டு மணிவாக்கில் ராமச்சந்திரனிடமிருந்து போன் வந்தது. எடுப்பதா வேண்டாமா என்று யோசனை. எடுத்தால் காரியம் கெட்டுவிடும். எடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. எடுத்தேன். ‘எங்கட இருக்கே... கிளம்பிட்டியா...?’என்று கேட்டான். ‘நான் கிளம்புறது இருக்கட்டும். நீ கிளம்பிட்டீயா?’ என்றேன்.‘டேய்.. நீ கிளம்புறப்ப போன் பண்ணு. நான் கிளம்பிவர்றேன்’என்று அவன் சொன்னதும் சுர்றென்று என் உச்சி மண்டையில் ஏறியது. அவன் பாணியிலே நாரசமாய் இறங்கிவிடலாம் என்று தான் பார்த்தேன். காரியம் கைகூடும் நேரத்தில் கலனிப்பானைக்குள் கைவிட்டுவிடக் கூடாது என்றெண்ணி அந்த யோசனையைக் கைவிட்டேன். வந்த ஆத்திரத்தைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன். ‘ஏய்.... கௌம்பிவாடான்னா.... என்னக் கிராஸ் கேள்வி கேட்குற... சரியா மூணுமணிக்கு நீ அங்க இருக்கணும் ஆமா... நாம் எப்படியாவது வந்து சேர்றேன்’என்று சொல்லிவிட்டு போனைக் கட்பண்ண நினைத்தேன்.

தம்பி அசருவானா என்ன?. ‘கிளம்புறதுக்கு முன்னாடி போன் பண்ணுடா... நான் கிளம்பிவந்துடுறேன்’ என்றான் சாவகாசமாக. எனக்குத் தலையில் மடேர் மடேரென்று அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. ‘என்னமோ பண்ணித் தொலை’ என்று நினைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தேன். இதற்குள் பத்து நிமிடம் பறந்துவிட்டது. எனக்கு நெஞ்சு வலி வராததுதான் பாக்கி. வேலையை முடித்துவிட்டு நேரத்தைப் பார்த்தால் உயிரே போய்விட்டது. மணி இரண்டு ஐம்பது. நான் இருந்தது திருமலைப்பிள்ளை ரோடு. போகவேண்டிய இடம் கோடம்பாக்கம் ராம் தியேட்டர் பின்புறம். நண்பன் அய்யப்பனிடம் விஷயத்தைச் சொல்லிக் கெஞ்சினேன். அவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்கவில்லை. ‘சார் இதைவிட வேலையென்ன வேண்டிக்கிடக்கு.... உங்க ஃப்ரண்டுக்கு சினிமாவுல சான்ஸ் கிடைச்சா எனக்கு ட்ரீட் வைக்கச் சொல்லுங்க’ என்று அவன் சொன்ன போது பைக் கோடம்பாக்கம் மேம்பாலத்தின் மேல் பறந்து கொண்டிருந்தது. வண்டியில் ஏறும் முன் ராமச்சந்திரனுக்குப் மறக்காமல் போன் பண்ணிவிட்டுத்தான் கிளம்பினேன். ‘தோ...வந்துட்டேன்‘ என்றான். கோடம்பாக்கம் வ.உ.சி. தெருவில் உள்ள இயக்குநரின் அலுவலக வாசலில் அய்யப்பன் வண்டியை நிறுத்தும் போது மணி சரியாக 2.55. திடுதிடுவென்று ஈரக்குலையைக் கையில் பிடித்துக்கொண்டு படியேறினால் இயக்குநரைச் சந்தித்துவிடலாம். அங்கே எனக்காக ராமச்சந்திரன் காத்திருப்பான் என்று எதிர்பார்த்தேன். ஆள் இல்லை. பதறியடித்துக் கொண்ட ராமச்சந்திரனுக்குப் ஃபோன் போட்டேன். எடுக்கவில்லை....

|
This entry was posted on 12:12 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On July 30, 2010 at 2:40 AM , sandy said...

guru kalakkureenga ponga

 
On July 30, 2010 at 8:20 PM , Guna said...

சபாஷ் ஒரு சரியான சவாலை நீங்கள் சந்தித்து கொண்டிருந்தீர்கள்...

 
On July 30, 2010 at 8:21 PM , Guna said...

ஆனாலும் உங்களுக்கு பொருமையும் கூட

 
On May 6, 2011 at 6:49 AM , Padma said...

அன்பு நண்பருக்கு,

அமர்க்களமாக உள்ளது! உங்களின் அங்கததோடு கூடிய நடை மிக அருமை!

வாழ்த்துக்கள்!

பத்மகிரீசன்.